
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பகல் முழுக்க பெய்த இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு மதியத்துக்குமேல் திடீரென்று விடுப்பு அளிக்கப்பட்டதால் கொட்டும் மழையில் மாணவ, மாணவியர் கடும் அவதியுற்றனர். திருநெல்வேலி மாநகரம் திக்குமுக்காடியது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை 7 மணியிலிருந்து சாரல் மழை தொடங்கியது. காலை 10 மணிக்குமேல் இந்த மழை வலுத்து, இடி மின்னலுடன் கனமழையாக பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கனமழை இரவிலும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் இருள் சூழ்ந்ததை அடுத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

