
பண்ருட்டி முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டரான கடலூர் எம்.பி. ரமேஷுக்கு வரும் 22ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கடலூர் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் எம்.பி. டிவிஆர்எஸ்.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரித் தொழிற்சாலை உள்ளது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர் கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதியன்று எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து எம்.பி. ரமேஷ் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சரண்டரானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

