ராமேசுவரம்: தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்த நிலையில், இன்று மதியம் மேலும் 12 மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மண்டபம் தென்கடல் பகுதியிலிருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்ற விசைப்படகுகள் இன்று (டிச.19) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இன்று மதியம் இலங்கையின் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சபரிதாஸ், இவரது அண்ணன் அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைப்பிடித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மண்படத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் என 55 மீனவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்