
வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தொடர் கனமழை பொழிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழகப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் புதுச்சேரிக்கு அதிக அளவில் வருகிறது. ஏற்கெனவே புதுச்சேரியில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதாலும், புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாகவும், சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப்பாலத்தைத் தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து வருவோர் வில்லியனூர்-திருக்காஞ்சி பாலம் வழியாகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

