மழை காரணமாக அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே, மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில், மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த 6-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் கால அவகாசம் அளித்தது. அதன்படி, மேற்கண்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மின்நுகர்வோர், மின் கட்டணத்தைச் செலுத்த 8 முதல் 15-ம் தேதி வரை கடைசி நாளாக உள்ளவர்களுக்கு கூடுதலாக 15 தினங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதேபோல், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி 16 முதல் 29-ம் தேதி வரை உள்ளவர்கள் 30-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மின் கட்டணம் செலுத்த இன்று (30-ம் தேதி) கடைசி நாளாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்