
உரிய இழப்பீடு வழங்காமல் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளைத் தொடரக்கூடாது என வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களில் ஏறி உடுமலை விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை கோட்டத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பவர் கிரிட் நிறுவனம் சார்பில் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமம் முதல் கோவை மாவட்டம், இடையர்பாளையம் வரை 400 கிலோவாட் கொண்டு செல்லும் வகையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உடுமலை அடுத்த மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம் கிராமங்களில் 17 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தை திட்டப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த விவசாயிகள் குடும்பத்துடன் திரண்டு வந்து, பணிகளை நிறுத்தக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து உயர் மின் கோபுரங்களில் ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சென்ற உடுமலை கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம், கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

